ஆட்சியில் பங்கு என்றால் புதுச்சேரியை மறந்து விடக் கூடாது: கருணாநிதி!
திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:19 IST)
தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்க வேண்டுமென்று கேட்கும் போது, பக்கத்தில் உள்ள புதுச்சேரியை மறந்து விடக் கூடாது, அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
திருச்சியில் நேற்றிரவு நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருதை பெற்றுக் கொண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தங்கபாலு ஒரு கருத்து சொன்னார். காலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், எதிர்காலத்தில் தி.மு..க, காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலரை தனது ஆட்சியில் இணைத்துக் கொள்ளுமா? என்று கேட்டதற்கு, கட்சி மேலிடம் கேட்டால் அதை பற்றி சிந்திப்போம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு ஜாடைமாடையாக சொன்னேன்.
ஆனால் இங்கு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இத்தனை லட்சம் பேர் கூடியிருக்க சபைக்கு மத்தியில் பகிரங்கமாக ஆட்சியில் பங்கு குறித்து பேசி விட்டு சென்றிருக்கிறார். பத்திரிக்கையாளர்களிடம் கூறிய படி இது இரண்டு கட்சிகளின் மேலிடத்து தலைவர்களுக்கு மத்தியில் பேசப்பட வேண்டியது.
தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு பேசி முடிவு எடுக்கப்பட வேண்டிய விடயம். காங்கிரஸ் மேலிடம் சொன்னால் அதுபற்றி சிந்திக்கும். இது வெறும் தமிழகத்தோடு முடிகிற பிரச்னை அல்ல. பக்கத்தில் புதுச்சேரியும் இருக்கிறது. அதற்கும் தங்கபாலு தான் தலைவர். இது குறித்து முடிவுக்கு வர வேண்டும். எத்தகைய முடிவு என்பதை நானும், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசி முடிவு எடுக்கும் சூழல் வருமானால் அதற்கு தயாராக இருக்கிறோம்.
நான் செல்ல முடியா விட்டாலும் டி.ஆர்.பாலு போன்றோர் டெல்லி சென்று பேசுவார்கள். தேவையில்லாமல் இச்செயல் விரிவடையக் கூடாது. விரிவடைய வேண்டியது நமது நட்பு, ஒற்றுமை, ஐக்கியம், நாம் ஏற்றுள்ள கொள்கை வெற்றி, மதநல்லிணக்கத்தை போற்றும் ஆட்சி, கருத்து ஆகியவையாகும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.