சென்னையில் தடுப்பூசியும், மஞ்சள் காமாலை ஊசியும் ஒரே நேரத்தில் போடப்பட்ட ஐந்து மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை அயனாவரம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ராஜ்குமார்- வசந்தகுமாரி எந்த தம்பதியினருக்கு சூர்யா என்ற 5 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. குழந்தை சூர்யாவுக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று மதியம் அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு குழந்தை சூரியாவுக்கு தடுப்பூசியும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும் போடப்பட்டது. வீட்டுக்கு போனதும் குழந்தை சூர்யா மயக்கத்திலேயே இருந்துள்ளான். குழந்தை தூங்குவதாக நினைத்துக் கொண்ட பெற்றோர், வெகு நேரமாகியும் குழந்தைக்கு மயக்கம் தெளியாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகவும் தடுப்பூசியும், மஞ்சள் காமாலை ஊசியும் ஒரே நேரத்தில் போட்டதால் குழந்தை இறந்திருக்கிறது என்று மருத்துவர் கூறினார்.
இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனையை பெற்றோர், உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ஐ.சி.எப். காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், குழந்தை சாவுக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.