சீனாவில் சமீபத்தில் பனிப்பொழிவு கண்காட்சி கொண்ட சுற்றுலா தளம் திறக்கப்பட்டது. ஆனால் இதில் பனிப்பொழிவுக்கு பதிலாக நோப்பு நுரை மற்றும் பருத்தி பஞ்சுகள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து, அந்த சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக ஒரு பனி கிராமம் திறக்கப்பட்டது. இங்கு அழகாக பனிப்பொழிவு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
ஆனால், அருகில் சென்று பார்த்தபோது அது உண்மையான பனிப்பொழிவு அல்ல என்பதும், சோப்பு நுரை மற்றும் பருத்தி பஞ்சுகள் பயன்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. பஞ்சுகளை கொண்டு பனிப்பொழிவைப் போல் காட்டியுள்ளதை பார்த்து, சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புகார் அளித்த நிலையில், அந்த சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எதிர்பார்த்தபடி உண்மையான பனிப்பொழிவு ஏற்படவில்லை என்பதால், சோப்பு நுரை மற்றும் பஞ்சுகளை பயன்படுத்தியதாக அந்த சுற்றுலா தள நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.