மத உணர்வை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது: சரத்குமார்!
வியாழன், 18 செப்டம்பர் 2008 (10:21 IST)
''மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் மீது, ஒருவர் தாக்குதல் தொடுப்பதும் தீவிரவாதம் தான்'' என்று கூறியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ''மத உணர்வை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பணவீக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குண்டுவெடிப்பால் இழப்பு, வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்சனைகளில் நாடு சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ஒரிசா கலவரம் வேதனையை தருகிறது. நாடு முழுவதும் கண்டன குரல் எழுந்துள்ளது.
மத உணர்வை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. கிறிஸ்தவ அமைப்புகள், இந்தியா எங்கும், அரசுக்கு அடுத்தபடியாக பள்ளி, கல்லூரிகள் நடத்துவதன் மூலம் கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது சிலர் திட்டமிட்டு வன்முறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்கு உரியது.
ஒரிசாவில் அமைதி திரும்புகிற நிலையில், இப்போது கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழ்நாட்டில் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரிலும், கேரளாவிலும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் மீது, ஒருவர் தாக்குதல் தொடுப்பதும் தீவிரவாதம் தான். இதை தவறு செய்பவர்கள் உணர வேண்டும்.
நாடு அமைதியாக இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அப்படி மக்களின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு தீயசக்தியையும் நாம் அனுமதிக்க முடியாது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.