மதுரையில் ம.தி.மு.க. மாநாடு தொடங்கியது!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:32 IST)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) மதுரை மண்டல மாநாடு இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகம் முழுவதும் இருந்து பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் நடைபெறும் இந்த மதுரை மண்டல மாநாட்டின் நுழைவு வாயிலில் உள்ள அண்ணாசிலைக்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியின் தொண்டரணி சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வண்ணமயமாக இன்று காலை தொடங்கிய இவ்விழாவில், வைகோ மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் மாநாட்டு கொடியை கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வீர இளவரசன் ஏற்றி வைத்தார். மாநாட்டு ஜோதியை வைகோ ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.
மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. இன்றிரவு மாநாட்டு நிறைவு பகுதியில் வைகோ உரையாற்றுகிறார்.
மாநாட்டையொட்டி, மதுரை மாநகர் முழுவதும் அலங்கார வளைவுகள், உயரமான கட்-அவுட்கள், கொடிகள், தோரணம் என்று களைகட்டுகிறது.