சென்னை: அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் 1,405 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டு தோறும் தமிழக அரசு ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து வந்தது. அதன் படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், 7 ஆண்டு சிறைத் தண்டனை முடித்தவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை முடித்தவர்கள் நன்னடத்தை விதிகளின்படி அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதேபோல் இந்தாண்டும் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 1,405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையிலிருந்து 6 பெண்கள் உட்பட 117 பேரும், கோவை சிறையிலிருந்து 296 பேரும், பாளையங்கோட்டை சிறையிலிருந்து 273 பேரும், மதுரை சிறையிலிருந்து 266 பேரும், திருச்சி சிறையிலிருந்து 181 பேரும், கடலூர் சிறையிலிருந்து 128 பேரும், வேலூர் சிறையிலிருந்து 131 பேரும், சேலம் சிறையிலிருந்து 10 பேரும், கேரளாவில் இருந்து 3 பேரும் விடுதலையானார்கள்.
புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு தொண்டு நிறுவனங்கள் சார்பில் விடுதலையான கைதிகளுக்கு தையல் எந்திரங்கள், ஐஸ்கிரீம் விற்பனை பெட்டியுடன் கூடிய சைக்கிள், பூ வியாபாரம் செய்வதற்காக இரண்டு பேருக்கு தலா 2, 500 ரூபாய், 23 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.