தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்: சரத்குமார் வலியுறுத்தல்!
டெல்லியில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வை தொடர்ந்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ''தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜெய்ப்பூர், பெங்களூரு, அகமதாபாத் அதைத் தொடர்ந்து டெல்லியிலும் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நிகழ்ந்து அதன் விளைவாக பொதுமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பது நமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நிகழ்ந்து பல உயிர்கள் பறிபோனபின் தீவிரவாதத்திற்கு எதிரான குரல் கொடுப்பது மட்டும் நமது நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. இந்த அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்று பல்வேறு தீவிரவாத அமைப்புகள் நாங்கள்தான் இதை செய்வோம் என்று பெருமையாடு சொல்லிவருவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கிறது.
அரசு உளவுத்துறை தீவிரவாத அமைப்புகளையும், தீவிரவாதிகளையும் சரிவர கண்காணித்து வருவதில்லையோ என்கிற ஐயப்பாடும் இந்த நேரத்தில் எழாமல் இல்லை.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக இருக்கின்ற சட்டங்களைவிட கடுமையான சட்டமும், அதை தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற சரியான காலகட்டம் இன்றுதான் என்பதை உணர்ந்து, மத்திய அரசு, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே அத்தகைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
உலகெங்கும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதால், நம் நாட்டிலும் அது தலை தூக்கியிருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டாமல், அமைதிக்கும், அகிம்சைக்கும் பெயர் பெற்ற நம் மண்ணில் தீவிரவாதம் இனியும் தலை தூக்கக்கூடாது என்கின்ற உறுதி நம் அனைவருக்கும் அவசியம் வேண்டும்.
ஆக இனியும் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாமல், நமது நாட்டின் வளர்ச்சிப் பயணம் தங்கு தடையின்றி செல்லவும், மக்களின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு குந்தகமும் விளையாமல் அமைதியோடும், மகிழ்ச்சியோடும் மக்கள் வாழ்வதற்கு அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.