ராமேசுவரம் நடுக்கடலில் படகு கவிழ்ந்து அகதிகள் 7 பேர் பலி!
ஞாயிறு, 14 செப்டம்பர் 2008 (11:27 IST)
தமிழக அகதிகள் முகாமிலிருந்து சிறிலங்காவுக்கு தப்பிச்சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 7 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 3 பேர் மீட்கப்பட்டனர்.
மதுரை, பழனி, மானாமதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களில் வசிக்கும் 13 அகதிகள் கள்ளத்தோணியில் சிறிலங்காவுக்கு தப்பிச்செல்வதற்காக ஏஜெண்டு ஒருவர் மூலம் தலா ரூ.6 ஆயிரம் செலத்தி கடந்த 11ஆம் தேதி மண்டபம் தோணித்துறையில் இருந்து நாட்டுப்படகில் சிறிலங்காவுக்கு சென்றார்கள்.
கடந்த 2 நாட்களாகவே மண்டபம், ராமேசுவரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் 13 பேரையும் ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் சிக்கி தனுஷ்கோடி அருகே திடீரென்று கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 13 பேரும் கடலில் மூழ்கினார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானர்கள். மற்ற 6 பேர் கடலில் நீந்தி 3ஆம் தீடை என்ற இடத்தில் கரையேறினர்.
இவர்களில் 3 பேர் கடலில் நீந்தி அரிச்சல்முனைக்கு சென்று அங்கிருந்து தப்பிவிட்டார்கள். இந்நிலையில் 3ஆம் தீடையில் 3 பேர் தவித்துக்கொண்டு இருப்பதாக ராமேசுவரம் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைடுத்து கடற்படையினர் மீட்பு படகில் விரைந்து சென்று அங்கு தவித்துக்கொண்டு இருந்த மற்ற 3 பேரையும் மீட்டு ராமேசுவரம் கடற்படை முகாமிற்கு கொண்டு வந்தார்கள்.