பல கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் அயல் நாடுகளுக்கு அனுப்பியதாக 1996ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தினகரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இதற்கிடையே, அமலாக்கப் பிரிவுக்கு சிறப்பு வழக்கறிஞராக தண்டபாணி நியமிக்கப்பட்டார். அவர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு மனு அனுப்பினார்.
அதில், அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் டி.டி.வி. தினகரன் மீது தொடர்ந்த வழக்குகள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கே.என்.பாஷாவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள், ஆதாரங்கள் ஏதேனும் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருந்தால் அவற்றை மனுதாரர் நீதிமன்ற அனுமதியுடன் பார்வையிடலாம்.
மனுதாரர் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய நீதிபதி போதிய அவகாசம் வழங்க வேண்டும். வழக்கை விரைவாக முடிக்க மனுதாரரும் ஒத்துழைக்க வேண்டும். அரசு தரப்பும் மேலும் காலதாமதம் செய்யாமல் சாட்சியங்களை ஆஜர்படுத்த வேண்டும். இந்த வழக்கை 5 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.