மகிழ்வுடனும், மனநிறைவுடனும் வாழ்க: கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து!
வியாழன், 4 செப்டம்பர் 2008 (13:57 IST)
''ஆசிரியர் சமுதாயம் தமது மக்கள் மனை, சுற்றம் சூழ நலனும் வளனும் வாய்ந்து, மகிழ்வுடனும் மன நிறைவுடனும் பல்லாண்டு புகழுடன் வாழ என் இதங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆசிரியராகப் பணி தொடங்கி, நம் இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கி உலகப் புகழ் குவித்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்க ஊதியம், 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வுநிலை ஊதியம், 20 ஆண்டு பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம், தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம், தமிழாசிரியர்களின் புலவர் பட்டம், பி.லிட் பட்டமாக மாற்றம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதுகளை, உயர் நிலைப்பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளிட்ட பிற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் வழங்கிட ஆணைகள்,
நல்லாசிரியர் விருது- 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' எனப் பெயர் மாற்றம், விருதுத் தொகை 1000 ரூபாயை, 1997ல் 2,000 ரூபாய் என்றும், 2006ல் 5,000 ரூபாய் என்றும் உயர்த்தியமை, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதிய உயர்வுகள், அகவிலைப் படிகள் உள்பட அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தையும் ஆசிரியர் சமுதாயமும் பெற்றும் பயனடையச் செய்கின்றமை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளி ஆசிரியர்கள் நியமனம்,
தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறை அடியோடு ரத்து எனச் சலுகைகளை வழங்கி அவர்களைக் காத்து வருகின்றமை முதலான இந்த அரசு வழங்கும் ஆசிரியர் நலத் திட்டங்களை நினைவு கூர்ந்து, ஆசிரியர் சமுதாயம் தமது மக்கள் மனை, சுற்றம் சூழ நலனும் வளனும் வாய்ந்து, மகிழ்வுடனும் மன நிறைவுடனும் பல்லாண்டு புகழுடன் வாழ என் இதங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளையும், இன்று மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெறும் ஆசிரியப் பெருமக்களுக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.