ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் விடுவிப்பு!
வியாழன், 4 செப்டம்பர் 2008 (10:42 IST)
நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ரூ.6 கோடி தார் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் விடுவிக்கப்பட்டார்.
1991 முதல் 1996 வரை அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறைக்கு தார் வாங்கியதில் ரூ.6 கோடி முறை கேடு நடந்ததாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் 48 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த கண்ணப்பன் சேர்க்கப்படவில்லை. இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2001-ல் இவ்வழக்கில் கண்ணப்பனும் சேர்க்கப்பட்டார்.
இதனை எதிர்த்து சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கண்ணப்பன் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய் யப்பட்டது.
இதனை எதிர்த்து கண்ணப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், "முதல் தகவல் அறிக் கையிலும், குற்றப்பத்திரிகையிலும் என்பெயர் இல்லை. உள் நோக்கத்துடன் வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், கண்ணப்பனை வழக்கில் இருந்து விடுவித்தார்.