கிவ்லைப் அமைப்பும், தமிழ் மையமும் இணைந்து ஏழை குழந்தைகள் கல்வி நிதிக்காக இன்று சென்னையில் மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
காலை 7 மணிக்கு தலைமைச் செயகலம் முன்பு இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை மத்திய அமைச்சர் எம்.எஸ்.கில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மெரீனா கடற்கரை சாலை வழியாக பெசன்ட்நகர் கடற்கரை சென்று அங்கிருந்து திரும்பி மெரீனா காந்தி சிலை வரை ஓடினார்கள். இவர்கள் மொத்தம் 21.09 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் போட்டி நடந்தது.
மாணவ-மாணவிகளுக்கு 7 கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டம் நடந்தது. இவர்கள் தீவுத்திடலில் நுழைவு வாயிலில் தொடங்கி பெரியார் சிலை, தூர்தர்ஷன் சாலை வழியாக மெரீனா காந்தி சிலையை வந்தடைந்தனர்.
50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான ஓட்டம் 3 கி.மீ தூரம் நடந்தது. இவர்கள் போர் நினைவு சின்னத்தில் தொடங்கி நேப்பியார் பாலம், கடற்கரை சாலை வழியாக காந்தி சிலையை சென்றடைந்தனர். ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலியில் செல்லும் ஓட்டம் நடந்தது.
50,000 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டியில் ராஜாத்தி அம்மாள், கனி மொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, நடிகர்கள் சூர்யா, நெப்போலியன், விக்னேஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.