ரமலான் நோன்பு நேரத்தில் மின் வெட்டு கூடாது: முஸ்லிம் அமைப்பு கோரிக்கை!
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:44 IST)
''ரமலான் நோன்பு முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்'' என்று முதல்வருக்கு, அனைத்து முஸ்லிம் ஜமா அத் உரிமை பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஜமாஅத் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சையத்காஜா மொய்தீன், பொது செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில், புனித ரமலான் நோன்பு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி ஒரு மாதம் கடைபிடிக்கப்படும்.
இந்த நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நோன்பு திறக்கும் வேலை, சிறப்பு தொழுகை, நோன்பு நோற்றல் போன்ற சமய கடமைகள் செய்யப்படும். இந்த கால கட்டங்களில் மின்சாரம் தடைபட்டால் சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால், நோன்பு நாட்கள் முடியும் வரை தடையின்றி மின்சாரம் வழங்க மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளனர்.