மேற்குவங்கத்தில் குறைந்த விலை நானோ கார் தயாரிப்புக்கான ஆலையை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க டாடா நிறுவனத்திற்கு அழைப்பு விடுப்பது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதாக இருக்காது என தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இதுதொடர்பாக சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நானோ கார்களை தயாரிக்கும் ஆலையை அமைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் டாடா நிறுவனம் இறுதி செய்துள்ள நிலையில், சமீபத்திய பிரச்சனைகளைக் காரணம் காட்டி அதே ஆலையை தமிழகத்தில் அமைக்க அந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுப்பது முறையாகாது என்றார்.
மேலும், தமிழகத்தில் நானோ கார் தயாரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக டாடா நிறுவனம் இதுவரை தமிழக அரசுடன் பேச்சு நடத்தவில்லை என்றும், அது போன்றதொரு சூழ்நிலை இனி ஏற்படாது என்றும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் குறிப்பிட்டார்.
நானோ கார் தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனத்திற்கு வழங்கிய 400 ஏக்கர் நிலத்தை, மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டாடா நிறுவன கார் ஆலை நிறுவும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.