பா.ம.க. மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை: கருணாநிதி!
சனி, 30 ஆகஸ்ட் 2008 (17:48 IST)
பா.ம.க. மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ப.சிதம்பரம், தி.மு.க கூட்டணியில் மீண்டும் பா.ம.க சேர வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
சென்னையில் இன்று நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கருணாநிதியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அப்போது, நான் அப்படி சொல்லவில்லையே என்று கருணாநிதி பதிலளித்தார்.
"தோழமைக்கட்சிகள் பிரிந்து சென்றது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தீர்களே?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பிரிந்து சென்றால் வருத்தம் அடையாமல் மகிழ்ச்சியா அடைய முடியும்?' என்று கூறினார்.
ஜெயலலிதா வந்தாலும் சேர்ப்போம் : முன்னாள் அ.இ.அ.தி.மு.க அமைச்சர் செல்வகணபதி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அவரை தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா மீது கூட தான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று கருணாநிதி நகைச்சுவையாக பதில் அளித்தார்.