முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தி.மு.க.வில் இணைந்தார்!
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
அ.இ.அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, இன்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.
webdunia photo
FILE
தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவரும், முதல்வருமான கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்தார். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த செல்வகணபதி, தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளது ஜெ.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 1991-96ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் வீட்டு வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக கடந்த 26ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் அடுத்த 2 நாட்களிலேயே அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.