கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. 3 மாதங்களுக்கு பிறகு அவர் நேற்று தமிழகம் திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 23 மீனவர்கள் 4 படகுகளில் கடந்த மே 26ஆம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்க சென்றனர்.
கச்சத் தீவு அருகே மீன் பிடித்தபோது 40 பேர் கொண்ட சிறிலங்க கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மீனவர்களை விடுதலை செய்து தமிழகம் திரும்பி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 25ஆம் தேதி 3 படகுகளில் 18 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர். ஆனால் பாம்பன் பகுதியை சேர்ந்த ஐந்து பேரை அனுப்பாமல் பிடித்துக் வைத்துக் கொண்டனர்.
3 மாதங்களாக சிறையில் இருந்த ஐந்து பேரும் கடந்த 7ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் ஐந்து பேரையும் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஐந்து பேரும் நேற்று சென்னை வந்தனர். பின்னர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.