துவரம் பருப்பு தேவையான இருப்பு உள்ளது: தமிழக அரசு விளக்கம்!
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (10:20 IST)
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவதற்குத் தேவையான இருப்பு உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் சிறப்பு பொது விநியோகத் திட்டத்துக்காக துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய நிலையில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கடந்த ஜூலை 25ஆம் தேதி விதிமுறைக்குட்பட்டு திறக்கப்பட்டது.
இதில், ஆவணங்களின் அடிப்படையில் தகுதியான 2 ஒப்பந்ததாரர்களில் குறைந்த விலைப்புள்ளி அளித்து இருந்த நிறுவனம், மியான்மர் நாட்டு அரசால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், மியான்மர் அரசால், கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது என்பது அந்த அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம் குறைந்த விலைப்புள்ளி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டபோதிலும், இந்த நிறுவனம் குறிப்பிட்டு இருந்த விலையைக் காட்டிலும் மற்றொரு நிறுவனமான கோலக்கும்பி நிறுவனம் டன் ஒன்றுக்கு ரூ.30,735க்கு (729 டாலர்) வழங்குவதாக எழுத்துப் பூர்வமாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், உள்நாட்டில் இதே ரக துவரம் பருப்பு டன் ஒன்றுக்கு ரூ.28, 850 விலை நிலவரம் இருந்தது. இதன்படி 15 ஆயிரம் டன் துவரை கொள்முதல் செய்யும் போது அரசுக்கு 2 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மேற்படி ஒப்பந்ததாரரின் விலைப்புள்ளி சந்தை நிலவரத்தைவிட கூடுதலாக இருந்ததால், அரசு நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்படி ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரத்து செய்து ஆணையிடப்பட்டது.
துவரையை இறக்குமதி செய்து அரைப்பதில் திரும்பப் பெறப்படும் பருப்பு விழுக்காடு, சரியான செலவினைக் கணக்கிடவும் 30 டன் துவரை வாங்கப்பட்டு சோதனை அரவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், டான்சானியா துவரை தற்போது வரத் தொடங்கியுள்ளதால், உலகச் சந்தை விலையும் தற்போது இறங்குமுகமாகவே உள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு எந்த வித இழப்பும் இல்லை. சிறப்புப் பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான பருப்பு வகைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
துவரம் பருப்பை பொறுத்தவரை 10,471 மெட்ரிக் டன் கிடங்கு மற்றும் கடைகளில் தற்போது இருப்பு வைக்கப்பட்டு, சிறப்பு பொது விநியோகத் திட்டத்துக்குத் தேவையான பொருட்கள் எந்தவித தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு வழங்கப்படுவது தொடர்பாக சில பத்திரிகைகளில் வெளியான விமர்சனங்கள் உள்நோக்கத்தோடு உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்டவையாகும்" என்று கூறப்பட்டுள்ளது.