குடும்ப அட்டை அடிப்படையிலேயே இனி 400 மூட்டை சிமெண்ட்: கருணாநிதி உத்தரவு!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (17:59 IST)
ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு குடும்ப அட்டை அடிப்படையிலேயே இனி 400 மூட்டை சலுகை விலை சிமெண்ட் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மேற்கொள்ளாத புதிய நடவடிக்கையாக 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள் மூலமாக மூட்டை ஒன்று 200 ரூபாய் வீதம் சலுகை விலையில் 400 மூட்டை வரை சிமெண்ட் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் அடிப்படையில், வழங்கி முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டு, அதன்படி சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, வீடு கட்டும் சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மக்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில் விதிகளைத் தளர்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்குப் பதிலாகக் குடும்ப அட்டையின் அடிப்படையிலேயே சிமெண்ட் பெற்று புதிய வீடு கட்டுவதற்கு 100 மூட்டை வரையிலும், பழைய வீட்டைப் பராமரிக்கும் பணிகளுக்கு 50 மூட்டை வரையிலும் சிமெண்ட் வழங்கிட 28.6.2008 அன்று முதலமைச்சரால் ஆணையிடப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மூலம் சிமெண்ட் விநியோகம் செய்யும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்குடன், புதிய வீடு கட்டுவோருக்குக் குடும்ப அட்டையின் அடிப்படையிலேயே இனி 400 மூட்டை வரை சிமெண்ட் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் மூலம், புதிய வீடுகட்டும் ஏழை எளிய மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் 400 மூட்டை சிமெண்டை எந்தவித இடையூறுமின்றித் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து குடும்ப அட்டைகள் மூலமாகவே பெற்றுப் பயன்பெற வழிவகை ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.