தமிழகத்தில் 2 நாள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:39 IST)
வங்க கடலில் உருவான குறைவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென் தமிழகத்தில் உட்புற பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்சி விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த படியாக தளியில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. பாலக்கோடு 9 செ.மீ, புதுக்கோட்டை, மணியாச்சி, தர்மபுரி, மேட்டுப்பட்டியில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடம். வட தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது.