பகலில் தினமும் 10 முறை மின்வெட்டு: வைகோ குற்றச்சாற்று!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:58 IST)
தமிழகத்தில் பகல் நேர மின்வெட்டு செய்யப்படும் நேரம் என்று மின்சார வாரியம் அறிவித்த நேரப்படி மின்வெட்டு செய்யாமல், நாள் ஒன்றுக்கு நான்கு முறையில் இருந்து பத்து முறை வரை பகல் நேர மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காற்றாலை மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும், மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டு விட்டதாலும் இரவு நேரங்களிலும் மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். ஏற்கனவே பகல் நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
பகல் நேர மின்வெட்டு செய்யப்படும் நேரம் என்று மின்சார வாரியம் அறிவித்த நேரப்படி மின்வெட்டு செய்யாமல், நாள் ஒன்றுக்கு நான்கு முறையில் இருந்து பத்து முறை வரை பகல் நேர மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் சான்றாகத்தான் இரவு நேர மின்வெட்டு அறிவிப்பு அமைந்துள்ளது. இதற்கு தி.மு.க. அரசு தமிழகத்தின் ஜீவதார உரிமைகளைக் காவு கொடுத்ததைப் போலவே மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறுகின்ற கடமையிலும் தவறி விட்டது.
பகல் நேர மின்வெட்டால் பொதுமக்களும், விவசாயிகளும், தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும், ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு நாடு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகித் தவிக்கின்ற நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர மின்வெட்டால் மாணவர்களும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பெரும் அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர்.
ஒரு பக்கத்தில் தொடர் மின்வெட்டு, பிரிதொரு பக்கத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்னொரு பக்கத்தில் நாளொருமேனியும், பொழுததொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி என்று மக்களை வாட்டி வதைக்கும் மத்திய-மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.