‌விழு‌ப்‌புர‌த்‌தி‌ல் மேலும் 22 பேருக்கு பார்வை பறிபோனது!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:37 IST)
பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட முகாமில் சிகிச்சை பெற்ற மேலும் 22 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் கடந்த மாதம் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பேருக்கு, பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் 45 பேரின் பார்வை பறிபோனது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க முடிவானது. 16 பேர் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையிலும், 14 பெண்கள் உட்பட 29 பேர் திருச்சியில் உள்ள ஜோசப் தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், முகாமின்போது பயன்படுத்தப்பட்ட 2 வகை சொட்டு மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. பார்வை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மற்றொரு கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில் சிகிச்சை பெற்ற 22 பேருக்கு பார்வை பறிபோன தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

கடுவனூரில் முகாம் நடந்த அதே நாளில், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்திலும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் முகாம் நடத்தப்பட்டது. இதில் சிகிச்சை பெற்ற 22 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்