பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: தமிழக அரசு அறிவிப்பு!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:36 IST)
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை இரவு 10 முதல் காலை 6 மணிவரை மூடவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடவும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதையடுத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் அத்தியாவசியப் பொருள்கள் என்பதாலும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இன்றியமையா சேவைப் பணி என்பதாலும், இத்தகைய கட்டுப்பாடுகள் சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனே விலக்கிக் கொள்ளவும் வழக்கம் போல் பெட்ரோல் நிலையங்கள் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களும், போதிய அளவு டீசல் விநியோகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்'' என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.