மது விற்பனையை அதிகப்படுத்தினால் தமிழ்நாடு குடிகார நாடு என பெயர் பெறும்: ராமதாஸ்!
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:10 IST)
அரசு தொடர்ந்து மது விற்பனையை அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக குடிகார நாடு என்ற அவப்பெயர் உருவாகும் நிலை ஏற்பட்டு விடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
webdunia photo
FILE
சென்னையில் இன்று பாமக சார்பில் "தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கை' குறித்த வழிமுறைகளை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் மது விற்பனையை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவர வேண்டும். மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் விற்பனை பெருகும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
அரசுக்கு வரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி வருவாய், மணல் கொள்ளை மூலம் தனியாருக்கு சென்று கொண்டிருக்கிறது. விற்பனை வரியை முறையாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அரசுக்கு கூடுதலாக வருமானம் வரும்.
அதேபோல், கிரானைட் குவாரி மூலமாகவும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும். இத்தகைய வழிகள் மூலமாக அரசாங்கம் தன்னுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இது போன்று வருவாய்க்கு வழியை ஏற்படுத்தாமல் அரசு தொடர்ந்து மது விற்பனையை அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக குடிகார நாடு என்ற அவப்பெயர் உருவாகும் நிலை ஏற்பட்டு விடும் என்று ராமதாஸ் கூறினார்.