இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருத்தணியில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. தற்போது 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகின்ற பரிதாபகரமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சுகாதாரக் கேட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பொது மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், போதிய மருத்துவர்கள் இல்லாததாலும் திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி நகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணாத, மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத, தி.மு.க. அரசை கண்டித்தும், திருத்தணி நகரில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அரக்கோணம்- திருத்தணிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டக் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை (27ஆம் தேதி) திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.