டி.என்.பி.எஸ்.சி தேர்வு: ஊனமுற்றோருக்கு தேர்வு கட்டணம் ரத்து- கருணாநிதி உத்தரவு!
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (11:54 IST)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஊனமுற்றவர்களுக்கு தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்ய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவைப்படும் பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஊனமுற்றவர்களின் நலன்களை மேம்படுத்திடவும், அவர்களின் மதிப்பைச் சமுதாயத்தில் உயர்த்திடவும், ஒரு புதிய சலுகையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஊனமுற்றவர் களுக்கு இனித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.