விசைத்தறியாளர்கள் போராட்டம்: தமிழக அரசு நடவடிக்கை! இல.கணேசன்
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (16:54 IST)
''விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடும் தொழில் நெசவுத் தொழிலாகும். இதில் பெரும்பான்மையாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இத்தொழில் நடந்தாலும் கோவை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் விசைத்தறி தொழில்கள் முற்றிலும் முடங்கி கிடக்கின்றன.
சில ஆண்டுகளாக விசைத்தறித் தொழில் நசிந்து கொண்டு வருகின்றது. ஏறி வரும் நூல் விலை உயர்வு ஒரு புறம், மறுபுறம் விசைத்தறியின் உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்நிலையில் விசைத்தறியாளர்கள் தங்களது கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் பலன் கிட்டவில்லை. கடந்த 16ஆம் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் விசைத்தறி உரிமையாளர்களுடன் அரசு தரப்பில் நடந்த பலசுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. விசைத்தறி தொழிலுக்கு பக்க பலமாக உள்ள நூற்பாலைகள் முடங்கியுள்ளன.
பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி- சேலைகள் தயாரிப்பில் இந்த விசைத்தறியாளர்களே முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அயல் மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் கோருகிறேன்.
ஆகவே தமிழக அரசு இப்பிரச்சனையை உடனடியாக தலையிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விசைத்தறி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விசைத்தறியாளர்கள் கேட்கும் நியாயமான கூலி உயர்வை அளித்திட வேண்டும்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.