காங்கிரஸ் தலைமை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: கே.வி.தங்கபாலு!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:35 IST)
''காங்கிரஸ் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
webdunia photo
FILE
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் திட்டம் உள்ளது. இதற்கான இறுதி நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாரிக்கப்படவில்லை
காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றக்கூடிய கப்பல். அந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த இடதுசாரிகள் திடீரென கடலில் குதித்து விட்டார்கள். இப்போது அவர்கள்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டு நடைபெறும். காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். பா.ம.க. இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று அவரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்று கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். 3வது அணி என்பது ஒரு கற்பனையே. அது சாத்தியமாகாது. அது இடதுசாரிகளுக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தங்கபாலு கூறினார்.