கண் பார்வை இழந்த 20 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: கருணாநிதி அறிவிப்பு!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:26 IST)
இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு முழுமையாக பார்வை பாதிக்கப்பட்டுள்ள 20 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "விழுப்புரம் மாவட்டப் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் பெரம்பலூர் தனியார் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற 68 பேரில், 29 பேர் கண்பார்வை இழப்புக்கு ஆளாகி மீண்டும் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திருச்சி சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரில், 9 பேருக்கு கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.
20 பேருக்கு தொடர்ந்து கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு முழுமையாக பார்வை பாதிக்கப்பட்டுள்ள இந்த 20 பேருக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
மேலும், உடல் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் அரசு ஓய்வூதியமான மாதம் ரூ.400 வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.