சென்னை மாநகராட்சியில், பணியின்போது இறந்த 240 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 15 வருடங்களாக விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 229 ஓட்டுனர்களுக்கு கைக்கடிகாரங்கள், சான்றிதழ்களையும் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் மட்டுமல்லாமல், உள்ளாட்சித்துறையிலும் 307 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2,34,276 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற காலி இடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 9 மேம்பாலங்களை மாநகராட்சியே குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்துள்ளது. பெரம்பூர் மேம்பாலம் இன்னும் 10 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். தற்போது, மேம்பாலம் கட்டப்பட்ட தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை 10 நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.
15 ஆண்டு காலம் விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. விபத்தின்றி ஓட்டவேண்டும் என்பதற்கு மட்டும் அல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் வழங்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.