அரசு ஊழியரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் சுரேஷ்ராஜனை பதவி நீக்கம் செய்ய கோரி கன்னியாகுமரியில ஆகஸ்ட் 25ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்யில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சியின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் தனித்துணை ஆட்சியர் ஜனார்த்தனன் கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் கொடுத்து 3 மாதக்காலத்திற்கு பிறகு அமைச்சர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனை கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியபோது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அனுமதித்தர மறுத்துவிட்டது.
இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 25ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படும் அமைச்சரின் செயலை கண்டித்தும், அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.