தூத்துக்குடி, திருவாரூருக்கு சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (11:39 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தூத்துக்குடி, திருவாரூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்றும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது என்றும் தென்னகரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண். 0630) திருச்சியில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
அதே போல், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 25ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0685) எழும்பூரில் இருந்து இரவு 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான், தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து 28ஆம் தேதி திருவாரூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (0609) தூத்துக்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு திருவாரூரை சென்றடையும்.
மறுமார்க்கம், திருவாரூரில் இருந்து 29ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (0610) திருவாரூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.