அனைத்துவகை ஊனமுற்றோருக்கும் நிவாரண உதவித் தொகை: கருணாநிதி உத்தரவு!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (09:58 IST)
பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும், வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பிரதமரின் ஊனமுற்றோருக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று சுய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதியாக, அந்த திட்டத்தில் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு பங்குத் தொகையை தமிழக அரசே ஏற்கும்.
பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும், வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
ஊனமுற்றோர்க்கு வேலை வாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.