பொறியியல் கல்லூரி மாணவிக்கு ரூ.25,000 உதவித்தொகை: கருணாநிதி உத்தரவு!
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை பொறியியல் கல்லூரி மாணவிக்கு ரூ.25,000 நிதி வழங்க முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவள்ளுர் மாவட்டம் நல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த யுவஸ்ரீ என்ற மாணவி அரசு ஆதி திராவிட நலத் துறை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்து பிளஸ்2 தேர்வில் 1,018 மதிப்பெண்கள் பெற்று, விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் கல்லூரியில் சேர ரூ.25,000 இல்லாத நிலையில் வறுமை காரணமாக கல்லூரியில் சேரவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியை படித்த முதலமைச்சர் கருணாநிதி, உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்டு இன்றைய தினமே அந்த மாணவியைச் சந்தித்து ரூ.25,000 நிதியினை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதி முதலமைச்சரின் பொது நிவாரணத்தொகையில் இருந்து வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.