நன்றியுணர்வை தீயில் கருகிட விட்டு விடக்கூடாது: கருணாநிதி வே‌ண்டுகோ‌ள்!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:52 IST)
கூட்டணிக் கட்சிகளாயிருந்தபோது கொண்டிருந்த நட்பையும், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும், திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிட விட்டு விடக்கூடாது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

"இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்" என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியதாக சில ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் வந்துள்ள செய்தி‌க்கு இ‌ன்று அவ‌ர் ப‌தி‌ல் அ‌‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "தி.மு.க.வுடன் உறவு குறித்து தங்கள் கட்சியின் மாநிலக் குழுவைக் கலந்து கொண்டு தான் முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ‌தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானதாக கருதுகிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

"அண்மைக் காலமாக குறிப்பாக சில நாட்களாகவே இடதுசாரிகளான கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டுமே, நாம் கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறாக செய்திகளை வெளியிடுவதும், கேலிச் சித்திரங்கள் வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தி.மு.க.‌வின‌ர் யாராயினும் குறிப்பாக ‌தி.மு.க. உட‌ன் தோழமை கொண்ட கட்சிகளைப் பற்றி, அவர்கள் எடுக்கும் முடிவினை அறிந்து, அதன் பின்னர் ‌தி.மு.க. தலைமைக் குழுவில் ஒரு முடிவெடுத்து அறிவிக்கும் வரையில் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டணிக் கட்சிகளாயிருந்தபோது கொண்டிருந்த நட்பையும், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும், திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிட விட்டு விடக்கூடாது" எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்