நளினி வழக்கு: விரைவாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:51 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இன்று வரவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகளுக்கு முன்பு நளினி தொடர்ந்த இந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவதா என்றும் அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.