திருச்சியில் தி.மு.க. முப்பெரும் விழா: கருணாநிதிக்கு பெரியார் விருது!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:14 IST)
தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள முப்பெரும் விழாவில் முதலமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தி.மு.க. தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா ஆகிய 3 விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது.
இந்த முப்பெரும் விழாவின் போது தி.மு.க.வில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருதுகள் வழங்கப்படுகிறது.
அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் சிறப்பு விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டார்.
பெரியார் விருது முதலமைச்சர் கருணாநிதிக்கும், அண்ணா விருது கட்சியின் பொருளாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கும் வழங்கப்படுகிறது.
கலைஞர் விருது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.