வேலை நிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 2,000 பேர் சென்னையில் கைது!
புதன், 20 ஆகஸ்ட் 2008 (13:43 IST)
சென்னை: நாடு தழுவிய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்த போராட்டத்தின் போது, சென்னையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பாரிமுனை குறளகம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற் சங்க பொதுச் செயலர் சவுந்தரராஜன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிற்சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் பெரும அவதிக்குள்ளாயினர்.
இதேபோல், சைதாப்பேட்டை பனகல் பூங்கா, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.