நெசவாளர்களுக்கு நியாயமான கூ‌லி: சர‌த்குமா‌ர் கோரிக்கை!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (11:08 IST)
விசைத்தறி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ‌கில இ‌ந்‌திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் 100 ‌விழு‌க்காடு கூலி உயர்வு கேட்டு கடந்த 16ஆ‌ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். தொடர் மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, விசைத்தறி உதிரிபாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கூலி உயர்வு கேட்டு அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பல்லடம், சோமனூர், அவினாசி, திருப்பூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சம் விசைத்தறிகள் 4 நாட்களாக இயங்கவில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஒரு நாளை‌க்கு ரூ.40 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தற்போது சராசரியாக தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 தான் கிடைக்கிறது. தற்போதைய விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, கல்விக் கட்டணம் உயர்வு போன்றவற்றையும், பிற தொழில்களில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலியோடு ஒப்பிடும் போதும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு. மேலும் மின்வெட்டு காரணமாக வேலை நாட்கள் குறைவதாலும் விசைத்தறி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்கி விசைத்தறி உரிமையாளர்களுக்கு அதிக கூலி கிடைக்கச் செய்து, அதன்மூலம் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் நியாயமான கூலி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்