மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல் துறை ஆணையர் எச்சரிக்கை!
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
தொழிற்சங்கங்கள் நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தின் போது பேருந்து, ரயில்கள் ஓடும் என்றும் பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை நகர காவல் துறை ஆணையர் ஆர்.சேகர் எச்சரித்துள்ளார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை போக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.இது பற்றி சென்னை நகர காவல் துறை ஆணையர் ஆர்.சேகர் கூறுகையில், வேலை நிறுத்தத்தின் போது பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
சென்னை முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினர் கண்காணிப்புடன் பேருந்துகள் இயக்கப்படும்.