மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தின் போது பேருந்து, லாரிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை போக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் புதன்கிழமை அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு, ஏ.ஐ.யு.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேபோல் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையும், த.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் புதன் கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
வேலைநிறுத்தம் குறித்து சி.ஐ.டி.யு, மாநிலப் பொதுச் செயலாளர் சவுந்திரராஜன், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 7 கோடி பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இப்போராட்டம் காரணமாக பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது.சென்னையிலும், மாவட்ட, வட்டார, ஒன்றிய அளவில் 120 இடங்களிலும் புதன் கிழமை அன்று சாலை, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று சவுந்திரராஜன் மேலும் கூறினார்.
வணிகர் பேரவையும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், கடைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.