ஜெ.வுக்கு பெருவியாதியா? விஜயகாந்த் பதிலடி!

சென்னை: நடிகர்கள் கட்சி துவங்குவது வியாதி என்றால், ஜெயலலிதா என்ன பெருவியாதிக்காரா என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், உண்மையைக் கூறுவதென்றால் தமிழகத்தை பிடித்துள்ள மிகப்பெரிய வியாதி ஜெயலலிதா தான் என்று கூறினார்.

சேது சமுத்திர திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சேது சமுத்திரத் திட்டம் முழுக்க முழுக்க பிரச்சனைக்கு உள்ளானதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம். இதுவரை சுமார் ரூ.2,500 கோடிக்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் மாற்றுப் பாதையில் இத்திட்டம் அமைந்தாலும் பரவாயில்லை என்று கூறினால், மக்கள் பணத்தை செலவு செய்ததில் என்ன பயன் உள்ளது என்றார்.

ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினி வருத்தம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்தை நடிகர்கள் உண்ணாவிரத மேடையில் அமரச் சொல்லி ஆதாயம் தேட நினைத்தது யார்? இப்போது பிரச்னை என்று வந்த பிறகு எதுவும் பேசாமல் அமைதி காப்பது யார்? என்பது மக்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என சூசகமாக பதிலளித்தார்.

தேர்தல் கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் மட்டும்தான் பேச முடியும். எதற்காக அவசரப்பட வேண்டும்? கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்கு வழி வகுக்கும்.

கூட்டணி இல்லாமல் காமராஜர் தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்கவில்லையா? இந்தச் சமுதாயம் மேன்மை அடையும் வகையில் நல்லதொரு ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். ஆனால் அதை ஆட்சிக்கு வந்த ஓரிரு நாள்களில் செய்துவிட முடியாது. 3 அல்லது 4 ஆண்டுகளில் தான் முடியும். தேர்தல் அறிவிக்கட்டும் பின்னர் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பதை அறிவிக்கிறேன் என்றார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, நடிகர் சிரஞ்சீவி புதிய கட்சி துவங்கியது பற்றி கேள்விக்கு, தமிழகத்தை பிடித்திருந்த வியாதி இப்போது ஆந்திராவிலும் பரவி விட்டது என குறிப்பிட்டிருந்து நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்