தியாகிக்கு ஒரு லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா வழங்கினார்!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (16:56 IST)
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
''தனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தியாகி சுப்பிரமணி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
ஆனாலும் தமிழக அரசு அவரைக் கண்டு கொள்ளவில்லை. தியாகி சுப்பிரமணிக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர் இளவரசன், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முத்துசேர்வடம் கிராமத்தில் உள்ள தியாகி சுப்பிரமணி வீட்டுக்குச் சென்று அவரிடம் ஜெயலலிதா சார்பில் ரூ.1 லட்சத்தை வழங்கினார்கள் என்று அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.