தியாகிகளை மதிப்பதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலும் இந்த அரசு வேறு எந்த மாநில அரசுகளையும் விட அதிக அளவில் தான் செய்துள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பதில் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தியாகிக்கு தமிழக அரசு உதவி செய்யவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே? என்று கேள்வி விடுத்து இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, தியாகிகளுக்கு தி.மு.க. அரசு உதவி செய்ய வில்லை என்பதை தியாகிகளே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அரியலூரைச்சேர்ந்த தியாகி சுப்பிரமணியன் ஓய்வூதியம் சம்பந்தமான கோப்பு கடந்த ஓராண்டு காலமாக கவனிக்கப்படவில்லை என்பதைப் போலவும், அவருக்கு அ.தி.மு.க. கட்சி சார்பாக ஒருலட்சம் ரூபாய் நிதி வழங்கப் போவ தாகவும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
உண்மையில் அரியலூர் தியாகி சுப்பிரமணியம் ஓய்வூதியம் கோரி அரசுக்கு மனு செய்தது சாட் சாத் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2002ஆம் ஆண்டில்தான். அந்த மனு 2006இல் அவர் ஆட்சியிலே நீடித்த வரை முடிவு காணப்படாமல் அந்தத் தியாகிக்கு உதவி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு எதுவும் செய்ததில்லை என்பதைப் போலவும், ஜெயலலிதா ஆட்சியிலேதான் தியாகிகளைப் போற்றி வளர்த்ததைப் போலவும் ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, இதற்கு பதிலும் அளித்துள்ளார்.
அந்த பதிலில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தியாகிகளுக்கெல்லாம் பெருந் தியாகியான பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை யொட்டி, ஆண்டு தோறும் தியாகிகள் தினம் என்றும், கல்வி வளர்ச்சி நாள் ஜூலைத் திங்கள் 15 என்றும் கொண்டாடப்பட வேண்டுமென்று அறிவிக் கப்பட்டு அது சட்டமாகவே ஆக்கப்பட்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தியாகிகளை மதிப்பதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலும் இந்த அரசு வேறு எந்த மாநில அரசுகளையும் விட அதிக அளவில் தான் செய்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். (தியாகிகளுக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டுள்ளார்)
இருந்தாலும் நேற்றைய தினம் சென்னையிலே சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்று ஆயிரக்கணக்கானவர்கள் அதிலே பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது பத்து லட்சத்திற்கு மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கும், 2 லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கும் மிகப் பெரிய அளவில் உதவி செய்ததையும், அதனை தமிழகமே பாராட்டுவதையும் பொறுத்த கொள்ள முடியாத நிலையில் புழுதி வாரி இறைத்திட முனைந்து வேறு வழியில்லாமல் ஓர் அறிக்கையை ஜெயலலிதா விடுத்திருக்கிறார் என்பது தான் உண்மை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.