திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதோடு மட்டும் அல்லாமல், உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீர்கேடுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மாகநராட்சி நிர்வாகம், உள்ளாட்சித் துறை அமைச்சரின் வருகையை யொட்டி பத்திரிகை விளம்பரங்கள் கொடுப்பதிலும், அலங்கார மின் விளக்குகள் அமைப்பதிலும், தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறது. இது போன்ற செயல்களினால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு 20 விழுக்காடு வரியும், வணிக விளாகங்களுக்கு 80 விழுக்காடு வரியும், தொழிற்சாலைகளுக்கு 100 விழுக்காடு வரியும் உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வின் காரணமாக ஏழை, எளிய மக்கள், சிறு வியாபாரிகள், பீடி சுற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் இது போன்ற பொறுப்பற்ற,செயலற்ற தன்மைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதோடு மட்டும் அல்லாமல், உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.