தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு: முதல்வர் அறிவிப்பு!

webdunia photoFILE
6வது சம்பளக் கமிஷன் அறிக்கையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியதைப் போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 62-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் இன்று காலை சுமார் 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. 8.08 மணிக்கு கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே முதல்வருக்கு மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து தமிழக காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 8.30 மணியளவில் முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக அவருக்கு தலைமை செயலாளர் திரிபாதி முப்படை தளபதிகளையும், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி மற்றுமசென்னை மாநகர கமிஷனர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் ஏறி காவல்துறையினர் அணி வகுப்பை முதல்வர் பார்வையிட்டார்.

ஆயுதப்படை, பெண்கள் சிறப்புக்காவல் படை, நீலகிரி மாவட்ட சிறப்பு காவல்படை, கடலோர காவல்படை, சிறப்புக்காவல் படை, அதிரடிப்படை, பெண் அதிரடிப்படை ஆகியோரின் அணிவகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார். இதையடுத்து வீர தீர செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய முதல்வர், அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பும் கணிசமான பங்கு உள்ளது. அந்த பங்கின் விகிதத்தை அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கை உடையது இந்த அரசு.

எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கான 6-வது சம்பளக் கமிஷன் அறிக்கைபடி மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிடும் என்று அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்