அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்க கோரி தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்திய மாநிலத் தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்பட 200க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு அந்த மாநில அரசு நிலம் ஒதுக்கியது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிலத்தை அரசு ரத்து செய்தது.
ஆனால் இந்து அமைப்பினர் அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்க கோரி ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலை அண்ணாசிலை அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தில் மாநில தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்பட கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மறியல் செய்த இல.கணேசன், திருநாவுக்கரசர் உள்பட 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இல.கணேசன், அமர்நாத் யாத்ரீகர்களுக்கு காஷ்மீர் அரசு வழங்கிய நிலத்தை அம்மாநில அரசு திரும்ப ஒப்படைக்கும் வரையில் இதுபோன்ற ஆர்ப்பாட்டமும், போராட்டமும் தொடரும்'' என்றார்.