மதிய உணவு திட்டத்துக்கு இந்த ஆண்டு நிதியில் 25 விழுக்காடு மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 11.74 கோடி பேர் தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 2008-09ஆம் ஆண்டுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 25 விழுக்காடு தொகை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்ட ஒப்புதல் வாரியத்தின் அனுமதியின் பேரில் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மதிய உணவு திட்டத்துக்கு உணவு, தானியங்கள் வழங்கியதற்காக இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.578.58 கோடி வழங்கப்படுகிறது. சமையல், போக்குவரத்து செலவு, நிர்வாக பணிகள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.1280.35 கோடியும் வழங்கப்படுகிறது.
இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கிய நிதி, சமையல், போக்குவரத்து செலவுகளுக்காக வழங்கிய நிதி உள்பட தமிழகத்துக்கு ரூ.116.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.