ஒகேனக்கல் திட்டத்தை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (11:56 IST)
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிக்கு கலந்தாலோசகர் நியமனத்தை விரைவுபடுத்தி பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டாலின் உத்தரவி‌ட்டு‌ள்ளா‌ர்.

தமிழக குடிநீர் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

அ‌ப்போது அ‌திகா‌‌ரிக‌ள் கூறுகை‌யி‌ல், 2007-08ம் ஆண்டில் 9625 குடியிருப்புகளுக்கு முழுமையான குடிநீர் வசதி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12549 குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டது.

2008-09ம் ஆண்டில் 10255 குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி அளிக்க திட்டமிடப்பட்டு, இதுவரை 1767 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டங்களில் தடையின்றி மின்சாரம் பெறும் வகையில் ரூ.65 கோடி செலவில் 111 தனி மின்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 87 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் அக்டோபருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் சரியான முறையில் இயங்குகின்றதா என்பதை வாரியப் பொறியாளர்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை மேலும் விரைவு படுத்தி 2009ம் ஆண்டு ஏப்ரலுக்குள் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிக்கு கலந்தாலோசகர் நியமனத்தை விரைவுபடுத்தி பணிகளை தொடங்கவும் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்