நளினி வழக்கு: ஆகஸ்ட் 20க்கு தள்ளிவைப்பு!
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் பதில் மனுத் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஏ. நாகமுத்து உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
முதல் மனு கடந்த 2006ஆம் ஆண்டும், இரண்டாவது மனு ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நளினியை வேலூர் சிறையில் நேரில் சந்தித்து பேசிய பின்னர், 2008ஆம் ஆண்டும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த இரண்டு மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நீதிபதி ஏ.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் அளித்ததோடு, இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை இன்று தள்ளிவைப்பதாக நீதிபதி ஏ. நாகமுத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.